தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடற்கரையில் சிக்கிய 2 கிலோ ‘கொகைன்’: ரூ.10 கோடிக்கு விற்க முயன்ற எட்டு பேர் கைது

2 mins read
27567ce8-92ad-4413-b724-2d78051615db
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இருந்து, ‘கொகைன்’ போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது. - படம்: ஊடகம்

சென்னை: காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ ‘கொகைன்’ போதைப்பொருளை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு 6 கோடி ரூபாய் என்றும் இதை ரூ.10 கோடிக்கு விற்க முயன்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இருந்து, ‘கொகைன்’ போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது.

இரண்டு கார்களில் போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து அமலாக்க - குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படைகளை அமைத்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

ஐஜி செந்தில்குமாரி தலைமையிலான தனிப்படையினர், தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை கிண்டி அருகே உள்ள பரங்கிமலைப் பகுதியில், சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் அந்தக் காரை விரட்டிச் சென்றனர். பின்னர், சினிமா பாணியில் அந்தக் காரை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டபோது, அதில் ஒரு கிலோ கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

காருக்குள் இருந்தவரின் பெயர் மகேந்திரன் என்றும் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் வனக்காப்பாளராகப் பணிபுரிபவர் என்றும் தெரியவந்தது.

மகேந்திரன் அளித்த தகவலின்படி, அவர் பிடிப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த மேலும் நான்கு பேர் கைதாகினர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, மற்றொரு கடத்தல் கும்பல் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று மேலும் மூன்று பேரைக் கைது செய்தனர்.

துப்பாக்கி முனையில் சிக்கிய அவர்களிடம் இருந்து மேலும் ஒரு கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட எட்டுப் பேரும் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர்கள்.

கைதான வனக்காப்பாளர் மகேந்திரனின் உறவினர் பாண்டி என்பவர், ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் குவிந்துள்ள நெகிழிக் கழிவுப்பொருள்களைச் சேகரித்தபோது ஒரு கிலோ கொகைன் உறை கிடைத்துள்ளது.

அதேபோல் பழனீஸ்வரன் என்பவருக்கும் ஒரு கிலோ கொகைன் கிடைத்த நிலையில், இருவரும் அதை மகேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர், அவற்றின் மதிப்பை அறிந்து தாம் வெளிச்சந்தையில் விற்க முயன்றதாக மகேந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்