தமிழகத்துக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்கள்: பிரதமர் தொடக்கிவைத்தார்

தமிழகத்துக்கு மேலும் 2 ‘வந்தே பாரத்’ ரயில்கள்: பிரதமர் தொடக்கிவைத்தார்

2 mins read
b4e452d1-3e3d-407d-aac1-e792ffd244a6
வந்தே பாரத் ரயில். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் செப்டம்பர் 2 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, எழும்பூா் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேவையுடன் புதிதாக இரண்டு ரயில் சேவைகள் இணைந்துள்ளன.

தமிழகத்தின் கோயில் நகரமான மதுரையிலிருந்து, கர்நாடகத்தின் தொழில் நகரமான பெங்களூருவை இணைக்கும் வகையில் ஒரு வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இதனுடன் எழும்பூா்- நாகா்கோவில் இடையே என இரண்டு ரயில்களுக்கான கால அட்டவணையும் இந்திய ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொளி வாயிலாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எல். முருகன், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “அடுத்த சில ஆண்டுகளில் நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக இருப்போம் என்பது உலகிற்குத் தெரியும். இது புதிய இந்தியாவின் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் உறுதி,” என்று குறிப்பிட்டார். மேலும், சாலைகள், ரயில்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் மத்திய அரசின் நிதி உதவியால்தான் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் எல். முருகன் பேசுகையில், “சென்னையை மையமாகக் கொண்டு பெங்களூரு, திருப்பதி, விஜயவாடா, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு 6,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது,” என்றார்.

மதுரையிலிருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சா் வீ.சோமண்ணா மதுரை - பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் தொடக்கவிழாவில் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்