கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் இருக்கையில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.
அதனைப் பார்த்ததும் ரயில் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.
அக்குழந்தையை ரயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.
இதனையடுத்து, காவல்துறையினர் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அந்தக் குழந்தையை ரயிலில் பயணம் செய்த ஒருவர் மறந்துபோய் விட்டுச்சென்றாரா அல்லது வேறு காரணம் உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்


