சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சென்னை கோட்டூர் பகுதியில் பிரியாணிக் கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) கைதுசெய்யப்பட்டு, காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தகராறு, திருட்டு என ஞானசேகரன் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிணையில் வெளியே வர முடியாதபடி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது எட்டு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.
“அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அதில், 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. 140 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். இந்த மாணவி தைரியமாகப் புகாரளித்தது போல மற்றவர்களும் தைரியமாகப் புகாரளிக்க வேண்டும்.
“குற்றவாளி எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், “சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஞானசேகரன், பொறியியல் துறையில் டிப்ளமோ பெற்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே பிரியாணி சமைத்து சாலையோரம் விற்பனை செய்துள்ளார்.
“வியாபாரம் நல்லபடியாக கைகொடுக்க, படிப்படியாக பிரியாணி தொழிலை விரிவுபடுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“சென்னையில் அடையாறு, காந்தி நகர், கோட்டூர் உட்பட மூன்று இடங்களில் நடைபாதைகளில் நடமாடும் வாகனத்தில் பிரியாணி விற்பனை செய்துள்ளார்.
“வருமானம் அதிகமானதும் ஞானசேகரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து மூன்று திருமணங்களைச் (சட்டபூர்வமாக அல்ல) செய்துள்ளார். இதில், முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், மற்ற இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.
“இவர்களில் ஒரு மனைவி, சென்னை அண்ணா பல்கலைக்கழக உணவு விடுதியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
“பணமும் பிரியாணி சமையலும் ஞானசேகரனுக்கு அரசியல் வட்டாரத் தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது.
“இதன் மூலம், கட்சிப் போராட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஞானசேகரனே பிரியாணி தயாரித்து தந்துள்ளார்.
“இவரது கைப்பேசியை இணையக் குற்றக் காவலர்களின் உதவியுடன் ஆய்வு செய்தபோது, ஏறக்குறைய 50 ஆபாசக் காணொளிகள் இருந்தது தெரியவந்தது.
“இந்நிலையில், ஞானசேகரனின் பின்னணி, இவருக்கு உதவியாக, உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்ற பட்டியலை காவலர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
“அதற்கான முதற்கட்ட பணி தொடங்கி உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசேகரனால் மேலும் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ள உயர்நீதிமன்றம், மூன்று பெண் அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி உள்ளது.

