சென்னை: தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை மீதான விவாதத்தின்போது, மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார்.
இத்திட்டத்திற்காக 2025-26ஆம் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
20 லட்சம் கல்லூரி மாணவர்கள் இருப்பதால் இந்நிதியைக் கொண்டு ரூ.10 ஆயிரம் மதிப்பில்தான் மடிக்கணினி வாங்க இயலும் எனச் சுட்டிக்காட்டிய திரு.தங்கமணி, தரமான மடிக்கணினிகளை, புதிய தொழில் நுட்பத்தோடு எப்படி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆண்டுதோறும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அதனால் மடிக்கணினி விலை 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் கூறினார்.
எனவே, அதிமுக உறுப்பினர் தங்கமணி மடிக்கணினி தரம் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


