சிதம்பரம்: சிதம்பரம் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை அக்கோவில் தீட்சிதர்கள் தனியாருக்கு விற்றுவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே, கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக எழுந்துள்ள புதுப்புகார் குறித்தும் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைச் செவிமடுத்த நீதிபதிகள், கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டதாகவும் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும், பக்தர்களுடைய காணிக்கை கோவில் கணக்கில் செலுத்தப்படவில்லை என்ற தகவலும் அதிர்ச்சியை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தீட்சிதர் தரப்பில் இருந்து உரிய வரவு, செலவு கணக்குப் புத்தகங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வரவு செலவுக் கணக்குப் புத்தகங்களைத் தாக்கல் செய்யாமல், வருமான வரித்தாக்கலுக்காக தணிக்கை செய்த கணக்கு விவரங்களைத் தந்துள்ளது ஏன் என பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நில விற்பனை தொடர்பாக தாசில்தார் தீர விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையே, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நில விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளை தீட்சிதர்கள் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் ஏற்க இயலாது எனக் கூறியுள்ளது.


