சென்னை: சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது மலேசியாவிலிருந்து சென்ற காதர் மொய்தீன் எனும் பயணியிடமிருந்து 2,000 நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ஆடவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புழல் லட்சுமிபுரம் பெருமாள் கோவில் இரண்டாவது தெருவில் ரவிக்குமார் என்பவர் கடல்வாழ் உயிரினங்களையும் மலைப்பாம்பையும் வைத்திருப்பதாக அந்த ஆடவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டிற்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் ஒரு மலைப்பாம்பும் 150 நட்சத்திர ஆமைகளும் அங்கு இருந்ததைக் கண்டனர்.
மேலும் சில சாதாரண ஆமைகளும் இருந்ததாகக் கூறப்பட்டது. அவற்றைக் கைப்பற்றிய வனத்துறையினர் வீட்டைப் பூட்டி, முத்திரை வைத்தனர்.
தலைமறைவான ரவிக்குமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

