சென்னை: இவ்வாண்டு இறுதிக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “தமிழகத்தில் இதுவரை 2,664 கோயில்களில் குடமுழுக்கு விழா முடிவுற்றுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் அந்த எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டிவிடும்.
“திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ரூ.74 கோடி செலவில் ஏறக்குறைய 114 திருத்தேர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
“ரூ.16 கோடி செலவில் 64 திருத்தேர்களை செப்பனிடும் பணி நிறைவு பெற்றுள்ளது.
“அத்துடன், 5 தங்கத் தேர்கள் ரூ.31 கோடி செலவிலும் 9 வெள்ளித் தேர்கள் ரூ.29 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
“நான்கு திருக்குளங்கள் ரூ.4.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
“இதுவரை ரூ.5,710 கோடி அளவுக்கு கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று கூறினார்.