மீன் பதப்படுத்தும் ஆலையில் வாயுக்கசிவு; 21 பெண்கள் மயக்கம்

1 mins read
5dc5bfe0-36de-47b9-93e1-b21704ed0b7e
படம்: - தமிழ் முரசு

தூத்துக்குடி: மீன் பதப்படுத்தும் ஆலையில் வேதிவாயு கசிந்து, 21 பெண் ஊழியர்கள் மயக்கமுற்ற சம்பவம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நிகழ்ந்தது.

அங்குள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களைப் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அவ்வாலையில் தமிழகத்தையும் வெளிமாநிலங்களையும் சேர்ந்த ஏறக்குறைய 500 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இரவு அங்கு திடீரென அமோனியா வாயுக்கலன் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், ஆலை முழுவதும் அமோனியா பரவி, மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டு 21 பெண்கள் மயக்கமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் ஐவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற 16 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அதனையடுத்து, அவர்கள் அனைவரும் தூத்துக்குடியிலுள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் முரளி தலைமையிலான குழு, அந்த மீன் பதப்படுத்தும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது.

வேதிவாயு கசிந்து பெண் ஊழியர்கள் மயக்கமுற்றது தொடர்பில் காவல்துறையும் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்