மதுரை: மதுரை கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.க, வினர் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “மதுரை கிழக்குத் தொகுதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி. 3.70 லட்சம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. இத்தொகுதியில் 328 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 395 வாக்குச் சாவடிகள் உள்ளன.
“வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடவடிக்கையின்போது மதுரை கிழக்குத் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகளே நீக்கப்பட்டுள்ளன.
“இங்கு முறையாக ஆய்வு நடத்தினால் 90 ஆயிரம் வாக்குகளாவது நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நாங்கள் ஆய்வு செய்த சில வார்டுகளில் ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
“மதுரை மாநகராட்சி 38 வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு என்ற பகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 337ல் 115 பேரும் 1 இ என்ற ஒரே கதவு எண்ணில் உள்ளனர். அதேபோல பாகம் எண் 338 லும் 96 பேர் அதே 1இ வீட்டு எண்ணில் உள்ளனர். இது எப்படி சாத்தியம்,” என்று பாஜகவினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பல ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தொகுதி முழுவதும் ஆய்வு செய்து தகுதியற்றோரைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் பாஜகவினர் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

