திருநெல்வேலி: இவ்வாண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் 2,250 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தி முடிக்கப்படும் என்று மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், மானூரில் உள்ள பழைமையான அம்பலவாணர் கோவிலில் 112 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) குடமுழுக்கு விழா நடந்தேறியது. அதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொன்மைமிக்க திருக்கோவில்களுக்குத் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்தவும், அங்குள்ள தேர்களைப் பாதுகாக்க கொட்டகைகள் அமைக்கவும், கோவில் குளங்களைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழக அறநிலையத் துறைக்கு உட்பட்ட 55 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின், ரூ.92 கோடியில் கோவில்களில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் ரூ.59 கோடியில் புதிய மரத்தேர்கள் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தபின் 850 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.6,703 கோடி மதிப்புள்ள 6,853 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் திரு சேகர்பாபு குறிப்பிட்டார்.

