தமிழகத்தில் புதிதாக 2,253 மருத்துவர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கிராமப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாக சிலர் புகார் பரப்புவதாகச் சாடினார்.
அடிப்படை புரிதல் இல்லாமல் சிலர் இவ்வாறு பேசுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“அரசு மருத்துவமனைகளில் புதிதாக சில காலி பணியிடங்கள் உருவாகும் என்பதைக் கவனத்தில் கொண்டுதான் 2,253 மருத்துவர்களைப் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“சிற்றூர்களில் இரவு நேரங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே சில இடங்களில் பணியில் இருப்பார்.
“சில சமயங்களில் மருத்துவர் இல்லையென்றால் உடனே மருத்துவர் பற்றாக்குறை என சில தரப்பினர் புரிதல் இல்லாமல் வதந்தி பரப்பி வருகின்றனர். இத்தகைய போக்கைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கிராமப்புறங்களில் இரவு நேர மருத்துவர் இல்லையெனில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெறலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இல்லையெனில் சம்பந்தப்பட்ட மருத்துவரை இருப்பிடத்துக்கு வரவழைத்து சிகிச்சை பெறலாம் என்றார்.

