தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 சீர்மிகு வகுப்பறைகள்: ஸ்டாலின் பெருமிதம்

2 mins read
562e61f1-302a-44a1-bc37-add3fc4f2b83
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 22,931 சீர்மிகு (நவீன – ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசுப்பள்ளிகள் தமிழகப் பெருமையின் அடையாளம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறை படைக்கும் சாதனைகள் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அந்தப் பணி தற்போது சென்னையில் உள்ள ஓக்கியம் துரைப்பாக்கம் அரசுப்பள்ளியில் நிறைவு பெற்றுள்ளது.

“நவீன மயமான தொடக்கப் பள்ளிகள் நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாடல் பள்ளிகள் எனப் பள்ளி கல்வித்துறை பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

“அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உறக்கச் சொல்வோம்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த குடியரசுத் தின விழாவின் போது உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்திருந்தார். சில புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

இதற்குப் பதிலளித்துள்ள பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழக ஆளுநர் கல்வி மீது கொண்ட அக்கறையால் இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை என்றும் அரசியல் ரீதியில் அவர் கருத்துரைத்திருப்பதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நிலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்வதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“பள்ளிக் குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தல் கணக்கு தெரியவில்லை என்று குறிப்பிடும்போது அது இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒன்று குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும், மற்றொன்று ஆசிரியர்களை அவமதிப்பது போன்று இருக்கும்.

“ஆளுநரின் கருத்து குறித்து பெற்றோரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவரும் ஆசிரியர்களும் கருத்து சொல்லட்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழகப் பள்ளி கல்வித்துறைக்கு வரவேண்டிய ரூ.2,155 கோடி நிதி இன்னும் வரவில்லை,” என்றார் அன்பில் மகேஸ்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்