தமிழ்நாட்டின் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டின் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

1 mins read
4583b670-22c8-4812-9787-21205b5f1187
வெடி விபத்து நிகழ்ந்த வனஜா பட்டாசு ஆலை. - படம்: என்டிடிவி
multi-img1 of 2

விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் அந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. போதுமான இடவசதி இல்லாத குறுகிய ஆலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் வேலை செய்தபோது பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாசு தயாரிக்கும் பணியின்போது, ​​மூலப்பொருள்களுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெடிகள் வெடித்த சத்தம் பத்து கிலோ மீட்டருக்கும் அப்பால் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் ஊடகங்களிடம் கூறினர்.

வெடி விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, “வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் நான்கு அறைகள் சேதமடைந்துள்ளன. அந்த அறைகளுக்குள் வெடிகள் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படும்,” என்றார்.

வெடி விபத்து நிகழ்ந்த ஆலையின் கட்டட இடிபாடுகளில் சிக்கியோரைத் தேடும் பணிகள் நடைபெறுகின்றன. தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பட்டாசு ஆலை உரிமையாளரைத் தேடி, பிடிக்க நான்கு தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
வெடிவிருதுநகர்உயிரிழப்பு