சென்னையில் தயார் நிலையில் 2,372 நிவாரண முகாம்கள்: செங்கோட்டையன்

சென்னையில் தயார் நிலையில் 2,372 நிவாரண முகாம்கள்: செங்கோட்டையன்

கோப்புப் படம்: லோக்கல் தமிழ்

19 Oct 2026 - 6:59 pm

2 mins read

சென்னை: சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிகளுக்காக 2,372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகரில் தேங்கிய மழைநீர் இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்குள் விரைவாக அகற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிவாரணப் பணிகளைச் சீராக ஒருங்கிணைக்க ஏழு அமைச்சர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்றும் திரு செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ற வகையில் நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

இதனிடையே சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சென்னை நகரின் முக்கியக் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பத்தின் காரணமாக, ஏரிகளின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்ட நிலையில், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்துத் தொடங்கியது.

24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 14.21 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், நீர் இருப்பு 1,390 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு 655 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், குடிநீர், தொழில் தேவைகளுக்காக 203 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல, புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் 663 கன அடியிலிருந்து 1,485 கன அடியாக உயர்ந்துள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 14.95 அடியைத் தொட்டுள்ளது. சென்னை குடிநீர்த் தேவைக்காக ஏரியிலிருந்து 171 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மழை தொடர்ந்து பெய்ததால் சென்னை நகரவாசிகளுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பில்லை என்றும் தேவைப்பட்டால் சிக்கராயபுரம் கல்குவாரி நீரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்