சென்னை: நிபா கிருமித்தொற்று பரவாமல் இருக்க தமிழக, கேரள எல்லையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எல்லையோரப் பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா கிருமித்தொற்றுக்கு அண்மையில் 24 வயது இளையர் பலியானார்.
இதையடுத்து, எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூர் - கேரள எல்லைப்பகுதியில் உள்ள வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் மருத்துவச் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பிறகே, தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தொற்றுப் பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் நிபா கிருமித்தொற்றுப் பாதிப்பு இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக, தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிபா கிருமி பரவல் தடுப்புச் சோதனைச் சாவடி மையமும் தற்போது செயல்படாமல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தென்காசி மாவட்டத்தில் சோதனை சாவடி மையம் மீண்டும் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வருபவர்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்க வேண்டுமென தென்காசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.