மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவோரில் 25% பேர் தேர்வு தமிழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 mins read
1561df30-adb9-4446-9a8d-d2ef47732d6b
தமிழக அரசின் சுற்றுலா, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இரண்டாவது மருத்துவச் சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது. - படம்: ஊடகம்

சென்னை: இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை பெற வருவோரில், 25 விழுக்காட்டினர் தமிழகத்திற்கு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு தரமான சிகிச்சையை உறுதி செய்கிறது என்று சென்னையில் நடைபெறும் மருத்துவச் சுற்றுலா மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் சுற்றுலா, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இரண்டாவது மருத்துவச் சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது.

இதில் பங்ளாதேஷ், எத்தியோப்பியா, இந்தோனீசியா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ், நேப்பாளம், இலங்கை, துருக்கி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும், மருத்துவர்கள், அயல்நாட்டுத் துாதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள் என 150 பேர் கலந்துகொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவச் சுற்றுலாவில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும்

பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ஏராளமானோர் இந்தியாவுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

“குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

“கடந்த நான்கு ஆண்டுகளில் தனியார், அரசின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1.50 கோடி மக்கள் காப்பீடு செய்து பயனடைந்து உள்ளனர்.

“தனியார், அரசு மருத்துவமனை வழங்கும் காப்பீட்டு திட்டத்தில், அதிக குடும்பங்கள் காப்பீடு செய்து, சிகிச்சை பெற்று வரும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் பலர், அம்மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் குறித்து விரிவாக விவரித்தனர். மேலும், ஒப்பீட்டு அளவில் தமிழகத்தில் உயர்தர சிகிச்சைக்கான செலவு மிகவும் குறைவாக உள்ளது என்பதையும் விளக்கினர்.

தமிழகத்துக்கு மருத்துவச் சுற்றுலா மேற்கொள்வோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. குறிப்பாக செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்