சென்னை: தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தமக்குப் பிணை வழங்கக் கோரி, அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறையினர் இதுவரை 25 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திரைத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பலருக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பது தெரிய வந்திருப்பதை அடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். ரத்தப் பரிசோதனையில், ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
இந்நிலையில், கிருஷ்ணாவுக்கும் அவருக்குமான நட்பு குறித்து தெரியவந்ததும், காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதில், கெவின் என்பவரிடம் இருந்து, போதைப்பொருள் வாங்கிய கிருஷ்ணா, அதை தன் நண்பர்களுக்கும் விநியோகித்துள்ளார். இதையடுத்து, கெவினும் கைதானார்.
இந்நிலையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தனக்குப் பிணை வழங்கக் கோரி, கிருஷ்ணா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதில், தமக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.
தாம் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள கெவினிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தமிழ்த் திரையுலகத்தினர் தம்மை ‘பவுடர் ஜெஸ்வீர்’ என்றுதான் குறிப்பிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
“நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பிறந்த நாள், படத்தின் வெற்றி விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது, போதைப்பொருள் விற்பேன்.
“நடிகர், நடிகையரைவிட, பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே என்னிடம் அதிகமாக போதைப்பொருள் வாங்கிவந்தனர்,” என்று கெவின் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

