லக்னோ: பதினாறு வயதுச் சிறுமியைக் கடத்திய 16 வயதுச் சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரப் பிரதேச மாநில போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, அம்மாநிலத்தின் பகரி காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு வசித்து வந்த ஒரு 13 வயதுச் சிறுமி, தன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது தேவரியா மாவட்டம் சலேம்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன், அவளைக் கடத்திச் சென்றான். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதம் காந்த், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனைக் குற்றவாளி என உறுதி செய்து தண்டனை வழங்கினார்.
சிறுவனுக்கு 21 வயது ஆகும் வரை காஜிரீப்பூரில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட வேண்டும். அங்கு அவனது கல்வி, உடல் வளர்ச்சி ஆகியன கண்காணிப்பாளரால் உறுதி செய்யப்பட வேண்டும்.
21 வயதை அடைந்தவுடன், எஞ்சிய தண்டனைக் காலத்தை அனுபவிக்க அச்சிறுவன் மாவ் மாவட்டச் சிறைக்கு மாற்றப்படுவார்.
சிறார் குற்றங்களில் சட்டத்தின் கடுமையை உணர்த்தும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.


