2,500 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை

2,500 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை

1 mins read
dbd2b7c4-75af-4e9d-a13f-b879cafaeb7b
தமிழகத்தில் 31,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 17 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். - கோப்புப் படம்: பாடசாலை

சென்னை: தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 2,500 அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளதால் அவை மூடப்படும் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 31,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 17 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

‘கொவிட் 19’ நெருக்கடியின்போது பொருளியல் சூழல் காரணமாகப் பல பெற்றோர்கள், தனியார் பள்ளியில் படித்து வந்த தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு மாற்றினர்.

இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது ‘கொவிட் 19’ நெருக்கடி அறவே இல்லாத நிலையில் பெற்றோர் பலர் மீண்டும் தனியார் பள்ளிகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

கடந்தாண்டு 48 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட படிக்கவில்லை. வேறு சில காரணங்களாலும் கடந்தாண்டில் 255 பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், 2,482 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 147 பள்ளிகள், சிவகங்கையில் 146, ராமநாதபுரத்தில் 139, திண்டுக்கல்லில் 131, ஈரோட்டில் 128, கோவையில் 80 பள்ளிகள் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்