சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏறக்குறைய 25,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு மாவட்டங்களிலும் நாள்தோறும் குறைந்தது 50 பேருக்கு காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பெரிய அளவில் உயிரிழப்புச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் காய்ச்சல் பாதிப்புக்குப் பின்னர் வேறு சில உடல் கோளாறுகளால் பலர் அவதிப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, நெல்லை, நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கி பாதிப்பு அதிகம் உள்ளதாகப் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தினமலர் ஊடகச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
“பருவநிலை மாற்றத்தால் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 25,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மாண்டுவிட்டனர்.
“அடுத்த மாதம் வரை டெங்கி பாதிப்பு நீடிக்கும். சிகிச்சைக்குத் தேவைப்படும் மாத்திரைகள் தொடர்ந்து கொள்முதல் செய்யப்படுவதால் மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி கண்காணித்து வருகிறோம்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

