சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பேருந்துகள் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
“சென்னையில் வழக்கமாக நாள்தோறும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும். இவற்றுடன் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு நாள்தோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே நான்கு நாள்களில் மட்டும் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
“இதேபோல் பிற ஊர்களில் இருந்தும் சென்னைக்கு நான்கு நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் 15 முதல் 19ஆம் தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் 800 பேருந்துகள் இயக்கப்படும்.
“அவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும்,” என்றார் அமைச்சர் சிவசங்கர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து வேலை பார்க்கின்றனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வசதியாக, ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.