சென்னையில் 258 கிலோ தங்கம் பறிமுதல்: 575 பேர் மீது வழக்கு

1 mins read
c6611b96-0643-44a6-bf92-fceba93edee4
சென்னை விமான நிலையம். - படம்: இணையம்

சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டில் சென்னையில் ஏறக்குறைய 258 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 175 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்தொடர்பில் கிட்டத்தட்ட 575 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் குறிப்பிட்டன.

இது 2023ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 218 கோடி ரூபாய் மதிப்பிலான 303 கிலோ கடத்தல் தங்கத்தின் அளவைவிடக் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு மத்திய அரசு தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை 15 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாகக் குறைத்ததால் தங்கக் கடத்தல் சம்பவங்களும் குறைந்துள்ளன.

இந்தியாவின் முக்கிய அனைத்துலக விமான நிலையங்களில் ஒன்றான சென்னைக்கு மலேசியா, சிங்கப்பூர், பேங்காக், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுகிறது.

“தங்கம், போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அதிகாரிகள் கூறியதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. “விமான நிலைய சுங்கப் பிரிவில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கடந்தாண்டு முதல் அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக எளிதில் தப்பிக்க முடியாமல் பலர் சிக்கியுள்ளனர்.

“குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து வந்து உள்நாட்டு விமானங்களில் மாறி பயணம் செய்வோர் மூலம் நடக்கும் கடத்தலையும் கண்காணித்து வந்தோம். இதனால், பெருமளவு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. தவிர, சுங்க வரிக் குறைப்பால், பெரியளவில் தங்கம் கடத்தும் செயலும் குறைந்து வருகிறது,” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்