பசுமைப் பள்ளிகளாக மாறும் 26 அரசுப் பள்ளிகள்

பசுமைப் பள்ளிகளாக மாறும் 26 அரசுப் பள்ளிகள்

1 mins read
752736a8-8bee-4ef0-a53e-768cfb6182c8
ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ.5.20 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநிலத்தில் 26 அரசுப் பள்ளிகளைப் பசுமைப் பள்ளிகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும்.

“அப்பள்ளிகளில் எரிசக்திப் பயன்பாட்டை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி நீரேற்றுக் கருவிகளைப் பயன்படுத்துதல், மழைநீர்ச் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் அமைத்தல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர்ப் பயன்பாட்டை குறைத்தல், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட பசுமைப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளிகளின் அனைத்து மின்தேவைகளுக்கும் சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்