சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கிய பரிசுத் தொகுப்பை ஏறக்குறைய 26 லட்சம் பேர் வாங்காமல் புறக்கணித்தது தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன், பச்சரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.
எனினும், இந்த ஆண்டு பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 2.20 கோடி பேருக்கு தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளின் மூலம், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றதாகவும் இதற்காக 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 88 விழுக்காட்டினர் பரிசுத்தொகுப்பைப் பெற்றுள்ளனர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 26 லட்சம் பேரும் பரிசுத்தொகுப்பைப் புறக்கணித்தது உறுதியாகி உள்ளது. பரிசுத்தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இடம்பெறாததே இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.