சென்னை: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச்சம்பவங்கள் மேலும் தொடராமல் தடுக்கவும் சென்னையில் காவல்துறை மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 285 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் சென்னை பெசன்ட் நகர்ப் பகுதியில் தவெக பிரமுகர் கண்ணன், திருவொற்றியூரில் துணை நடிகர் பிரதீப் ராஜ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தின.
இதையடுத்து, குற்றவாளிகள், சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக உள்ள நபர்கள் மீது தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதன்பேரில், நிலுவையில் பிடியாணை கொண்டவர்கள், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு ரவுடிகளை இலக்காகக் கொண்டு மாநகரம் முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) இரவு முதல் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 285 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

