விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி

1 mins read
28e2b4e1-f5b1-4dad-b193-0673dc817868
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. - மாதிரிப்படம்

விழுப்புரம்: தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்.

அதனைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி, 21ஆம் தேதிவரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி சந்திரசேகர் புதன்கிழமை (ஜூன் 26) அறிவித்தார்.

“வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று (ஜூன் 26) கடைசி நாளாகும். ஒருவரும் திரும்பப் பெறாததால் 29 பேரும் போட்டியில் உள்ளனர்,” என்று திரு சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அன்னியூர் சிவா (திமுக), சி. அன்புமணி (பாமக), டாக்டர் அபிநயா (நாம் தமிழர்) ஆகியோரிடையேதான் பெரும்போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிமுக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்