காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டித் தந்த திருடன்

2 mins read
05cd6e7d-7b0e-47e4-b851-37deb71eca58
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக் ஷரி சாமி. - படம்: ஊடகம்

பெங்களூர்: பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலத் திருடன் தனது கோல்கத்தா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு காவல் ஆணையர் தயானந்தா நேற்று அளித்த பேட்டியில், “பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக் ஷரி சாமி, 37, என்பவரை காவலர்கள் கைது செய்தனர்,” என்றார்.

“அவரிடம் இருந்து 181 கிராம் தங்கக் கட்டிகள், 333 கிராம் வெள்ளிப் பொருள்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2003ல் பஞ்சாக்‌ஷரி சாமி திருட்டுத் தொழிலில் இறங்கினார். 2009ல் இருந்து தொழில்முறை திருடனாக மாறினார்.

பல்வேறு வீடுகளில் திருடிய நகை, வெள்ளிப் பொருள்களை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார் இவர். பின்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நடிகைக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நடிகைக்காக பஞ்சாக் ஷரி கோடிக்கணக்கில் செலவழித்துள்ளார். இதற்கிடையில் 2016ல் கோல்கத்தாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

காதலிக்காக கோல்கத்தாவில் 3 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார். காதலியின் பிறந்த நாளுக்கு 22 லட்சம் ரூபாய்க்கு பரிசும் வாங்கி கொடுத்துள்ளார்.

“கடந்த 2016ல் திருட்டு வழக்கில் குஜராத் காவலர்களால் கைது செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சபர்மதி சிறையில் இருந்தவர், 2022ல் வெளியில் வந்து மீண்டும் திருடத் தொடங்கினார்.

“மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர் மீது 180 வழக்குகள் உள்ளன.

“திருடப்படும் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளார். கராத்தேயில் கறுப்பு பெல்ட்டும் வாங்கி உள்ளார். அவரது காதலியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்