சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த போதைப்பொருள்களை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையையும் புழக்கத்தையும் தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறை ஆணையர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மூலக்கடைப் பேருந்து நிலையத்தின் அருகே காவல்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தைச் சோதனையிட்டபோது அதில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 3 கிலோ எடையுள்ள அந்தப் போதைப்பொருள் பொட்டலத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததாகத் தெரிகிறது.