விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

படம்: தமிழக ஊடகம்

19 Sep 2024 - 6:39 pm

1 mins read

சென்னை: விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், நூறு விழுக்காடு தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (செப்.19) காலை சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

“மேலும், இவ்விபத்தில் நூறு விழுக்காடு தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், நூறு விழுக்காடு தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்திக்கு இரண்டு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்