தமிழ்நாட்டில் அரிசி விலை 30% உயர்வு

தமிழ்நாட்டில் அரிசி விலை 30% உயர்வு

படம்: புளூம்பெர்க்

19 Sep 2026 - 6:57 pm

2 mins read

சென்னை: போதுமான பருவமழை இல்லாததாலும் நெல் விளைச்சலில் எதிர்பாராத பாதிப்பு ஏற்பட்டதாலும் தமிழ்நாட்டில் அரிசி விலை 30 விழுக்காடு வரை உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வு குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் டி.துளசிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், ஏறத்தாழ 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதிலிருந்து 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

“பற்றாக்குறையைச் சமாளிக்க 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

“குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

“கடந்த சில மாதங்களில் அரிசி விலை 25 முதல் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்வாக இருக்கக்கூடும்.

“மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுவது சரியன்று. தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இன்னும் 90 நாள்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் வந்துவிடும்.

“எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை,” என்றார் அவர்.

நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பொன்னி அரிசி 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அது 69 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 26 கிலோ பொன்னி அரிசி மூடை ரூ.1,800க்கு விற்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் அதன் விலை ரூ.1,400.

ஒரு கிலோ இட்லி அரிசியின் விலையும் 33 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது என்று வியாபாரிகள் பட்டியல் போட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்