தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு

2 mins read
0d5ab77f-7494-43d7-bce5-c0d5f02abf2a
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான முதல் உயர்மட்ட வழித்தடம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு இந்திய அரசு ரூ.3,000 கோடி ஒதுக்கியிருப்பதாக மத்திய வீடமைப்பு, நகரப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் தோகன் சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ரூ.8,000 கோடிக்கும் அதிகமான நிதியை விடுவித்துள்ளது என்றும் 2025-26ஆம் ஆண்டுப் பணிகளுக்காக இதுவரை ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) திரு சாஹு தெரிவித்தார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ், மூன்று வழித்தடங்களில் 116.1 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணிகள் அனைத்தையும் 2028ஆம் ஆண்டிற்குள் முடித்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டுநரில்லா 32 ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த ரயில்களை நிறுத்திப் பராமரிக்க மாதவரத்திலும் பூந்தமல்லியிலும் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அத்துடன், சோழிங்கநல்லூர் - – சிறுசேரி இடையே மூன்றாவது பணிமனையை அமைக்க 30 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது தமிழக எம்.பி. ஒருவர், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்று கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சாஹு, “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 2024-25ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 5,219.57 கோடியை விடுவித்தது. 2025-2026 ஆம் ஆண்டில், மத்திய அரசு ரூ. 8,445.8 கோடியை ஒதுக்கியுள்ளது. அதில், ரூ. 3,000 கோடி இவ்வாண்டு விடுவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கினார்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் 44.33 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான முதல் உயர்மட்ட வழித்தடத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறந்து வைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அது அடுத்த ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் (MRTS) சேவையை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கு மத்திய ரயில்வே அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்