சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பிடிபட்டவர்களில் ஒடிசா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இது அண்மையில் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல், பிடிபட்ட வெளிநாட்டவர்களில் இலங்கை, நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதும் உறுதியானது.
நடப்பு ஆண்டில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அனைத்துலகப் போதைப்பொருள் கும்பலின், கட்டமைப்பின் ‘இபிசிஐடி’ எனும் அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்துக்குப் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன.
கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப்பொருள்களைக் கடத்துவதில் ஆந்திரா, கேரளா உட்பட 11 இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கை, நைஜீரியா, சூடான், செர்பியா, கென்யா, கானா, தான்சானியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ‘சிந்தடிக்’ எனும் மெத் ஆம்பெட்டமைன், ஹெராயின், கொக்கைன், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதைப்பொருள்களின் கடத்தலில் ஈடுபடுவதும் அம்பலமாகி உள்ளது.
கடந்த 2020 முதல் 2025 செப்டம்பர் மாதம் வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், ஆக அதிகமாக நைஜீரியாவைச் சேர்ந்த 21 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காகக் கைதாகி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையைச் சேர்ந்த 21 பேரும் சூடானைச் சேர்ந்த மூவரும் பிடிபட்டுள்ளனர். மேலும், உகாண்டாவைச் சேர்ந்த இருவரும் செனகல், செர்பியா, கென்யா, ருவாண்டா, கானா, தான்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 447 பேர் இதேபோன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த 893 பேர் சிக்கியுள்ளனர்.
மேலும், கேரளா (662), பீகார் (386), மேற்குவங்கம் (322), கர்நாடகாவைச் சேர்ந்த 145 பேர் பிடிபட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.