சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் வெறிநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 33 பேர் ‘ரேபிஸ்’ நோயால் உயிர் இழந்துள்ளனர். 6.50 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளானதாக தமிழகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 25 லட்சம் தெரு நாய்கள் இருக்கலாம் எனக் கருதப்படுவதாக கால்நடைத்துறை கூறியுள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே ரேபிஸ் தடுப்பூசி போடப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கூட இது தொடர்பாக கவலை தெரிவித்ததுடன், மத்திய மாநில அரசுகளுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனினும் தெரு நாய் தொல்லைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
தமிழகத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு 4.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகினர். இவர்களில் 43 பேர் ரேபிஸ் நோயால் மாண்டு போயினர். 2025ஆம் ஆண்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தபோதிலும், நாய்க்கடிக்கு ஆளானோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

