சென்னை: கடந்த வியாழன், வெள்ளி (அக்டோபர் 16, 17) இரு நாள்களில் மட்டும் அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையிலிருந்து ஏறக்குறைய 356,000 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழக்கத்தைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதன்மூலம் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கும் லட்சக்கணக்கானோர் பண்டிகை நாள்களில் தங்கள் குடும்பத்தாருடன் ஒன்றாக இருந்து, கொண்டாடி மகிழ முடிகிறது.
வழக்கம்போல் இவ்வாண்டும் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 16) சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 1.28 லட்சம் பேரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) 2.28 லட்சம் பேரும் என மொத்தம் 3.56 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு சிவசங்கர், “கடந்த ஆண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், நடப்பாண்டில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் 2.80 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது அரசுப் பேருந்துகள்மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது,” என்றார்.
மேலும், தனியார் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்திருந்ததாகவும் அவற்றின் உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்கி அதைச் சரிசெய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.