சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள மகளிர் கழிப்பறைகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் செல்ல வந்த நடிகை லதா ராவ், விமான நிலையத்தில் அவசரத் தேவையான சானிட்டரி நாப்கின் கிடைக்காமல் அவதிப்பட்ட அனுபவத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார். இதையடுத்து விமான நிலையத்தில் மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாதது குறித்த விவாதம் பரவலாக எழுந்தது.
அதற்குப் பதிலளித்த இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள், முந்தைய இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் தற்காலிகமாக அகற்றப்பட்டதாக விளக்கமளித்தனர்.
தற்போது தற்காலிக ஏற்பாடாக கழிப்பறைகளில் ஒட்டப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் ஊழியர் நாப்கினை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 36 இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் பயணிகள் நேரடியாக கழிப்பறைகளிலிருந்தே நாப்கின்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


