சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு இம்மாதம் 17ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 பேர் பயனடைந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தந்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையின் மூலம் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் காய்ச்சலைக் கண்டறிதல், அதற்கான உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல் கொசு ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பொது மக்களுக்கு நோய்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 627 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாகக் குறிடபபிடப்பட்டுள்ளது.

