புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களில் இதுவரை 388 பேர் நாடு திரும்பியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளளது.
இவர்கள் அனைவரும் இந்தியாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பியவர்கள் பனாமா போன்ற மூன்றாம் உலக நாடுகள் வழி இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்றும் அனைத்துலக குடியேற்ற அமைப்பின் உதவியோடு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்திய மாநிலங்களவையில் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “388 இந்தியர்களும் இந்தியாவை விட்டு சட்டபூர்வமாக வெளியேறியுள்ளனர். ஆனால் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் அதிக காலம் தங்கியிருந்துள்ளனர். சிலர் சட்டவிரோதமாக அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஏறக்குறைய 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவுகள் ஏதும் இல்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
எனவே, இந்திய குடிமக்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டுமே அமெரிக்காவில் நாடு கடத்தப்பட இந்தியா ஒப்புக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிக்கும் தங்கள் குடிமக்களை ஏற்றுக்கொள்வது அனைத்து நாடுகளின் கடமை என்றார்.
எனினும், அவர்கள் தங்களுடைய குடிமக்கள் தானா என்பதை உறுதி செய்துகொள்வதும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அடிப்படையில் கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களை இந்தியா ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிகபட்சமாக 2,042 பேர் நாடுகடத்தப்பட்டு இந்தியா வந்தனர்.
கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 1,368 ஆகக் குறைந்தது.