சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் 150 ஏக்கரில், 39 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி, செய்தி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமையவுள்ள இடங்களைப் புதன்கிழமையன்று (செப்டம்பர் 11) நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும், “படப்பிடிப்பு நடத்துவதற்காக 3 புதிய தளங்களைக் கொண்ட அரங்கங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
“இந்த இடங்கள் இறுதி செய்யப்பட்டு 3 புதிய படப்பிடிப்பு தளங்கள் கட்டப்படவிருக்கின்றன,” என்றார் அவர்.
“இதன் மூலம் படங்கள் தயாரிப்பவர்களுக்கும் திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கும் சின்னத் திரையை சார்ந்தவர்களுக்கும் இது அரிய வாய்ப்பாக நிச்சயமாக அமையும். காரணம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்துவதால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது, செலவுகள் குறைக்கப்படுகின்றன.
“திரைப்படத் துறையினர் விரும்பக்கூடிய ஒரு திட்டமாக நிச்சயமாக இது அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதியின் அடிப்படையில், இன்றைக்கு அதற்கானப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
“தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட இருக்கின்றது.
தொடர்புடைய செய்திகள்
“இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் அந்த இடத்தை பார்வையிட்டு இருக்கிறார்கள்.
“திரைப்பட நகர் அமைப்பதற்கு உகந்த இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் தொடங்க இருக்கின்றன,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

