சென்னை: சென்னையில் பணிபுரிந்துவந்த 39 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் மருத்துவமனைப் பணியின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சவிதா மருத்துவக் கல்லூரியில் ஆலோசகராகப் பணியாற்றி வந்த டாக்டர் கிராட்லின் ராய், புதன்கிழமை (ஆகஸ்ட் 27) மருத்துவமனையில் மயங்கி விழுந்தார்.
அவரைக் காப்பாற்ற சக மருத்துவர்கள் பல வழிகளில் முயன்றும் முடியவில்லை என ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார், ‘எக்ஸ்’ சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
“சக மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். அனைத்து முயற்சிகளை மேற்கொண்டும் இடது முதன்மை இதயக்குழாயில் 100 விழுக்காடு அடைப்பு ஏற்பட்டதால் உண்டான மாரடைப்பை எதனாலும் சரிசெய்ய முடியவில்லை,” என டாக்டர் குமார் கூறினார்.
டாக்டர் ராய்க்கு ஏற்பட்டது போல, 30, 40 வயதுகளில் உள்ள இளம் மருத்துவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படும் போக்கு கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மரணங்களுக்கு நீண்ட வேலை நேரம் முக்கியமான ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12 முதல் 18 வரை மணி நேரம் வேலை செய்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கு மேல்கூட வேலை செய்கின்றனர்.
மேலும், கரணம் தப்பினால் மரணம் என்ற நெருக்கடி இந்த வேலையில் இருப்பதாலும் மன அழுத்தமும் மிகவும் அதிகமாக உள்ளது. நோயாளிகளின் அதிகப்படியான எதிர்பார்ப்புகள், மருத்துவ - சட்டரீதியான கவலைகள் ஆகியவையும் மனத்தளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, உடல்நலப் பரிசோதனைகளைத் தவிர்த்தல் ஆகிய மற்ற காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
டாக்டர் ராய்க்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

