சென்னை: தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் குறித்து ஊடகங்கள் வழி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் நான்கு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான அரசு செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள், சாதனை தகவல்களை அரசு செய்தித் தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள்.
அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனைப்படி அரசு செய்தித் தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களைச் சந்தித்து தாங்கள் வெளியிட விரும்பும் தகவல்களைத் துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள், தகவல்களை வேகமாகவும், உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.