சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) ஒரேநாளில் ஏறக்குறைய 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை ஞாயிற்றுக்கிழமை தொட்டது. அன்று மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
முன்னதாக, ஒருநாளில் சராசரியாக 1.70 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்தனர். இதற்கு முன், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 3,74,087 பேர் பயணம் செய்ததே இதுவரை ஆக அதிகமான பயணிகளின் எண்ணிக்கையாக இருந்தது.
சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண பெரும்பாலானோர் சென்றதும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம்.
மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி, அதைக் காண பொதுமக்கள் திரண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.