நெல்லை: பேருந்தில் பயணிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளை மத்தியப் பிரதேசத்திற்குச் சென்று மீட்டு, முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர் தூத்துக்குடி காவலர்கள்.
நெல்லை பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (56). இவரது மனைவி ஜூலியட் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள தங்கள் மகனைக் காண்பதற்காக நெல்லையிலிருந்து ஆம்னி பேருந்து மூலம் புறப்பட்டனர்.
தங்களது கைப்பையில் சுமார் 40 பவுன் தங்க நகைகளை அவர்கள் வைத்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு சுங்கச்சாவடியைத் தாண்டி கரிசல்குளம் அருகே உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, கைப்பையைப் பேருந்திலேயே வைத்துவிட்டு இருவரும் உணவருந்தச் சென்றுள்ளனர்.
திரும்பி வந்து பார்த்தபோது, பையிலிருந்த 40 பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பேருந்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகள் மற்றும் அலைபேசி சமிக்ஞைகளை ஆய்வு செய்ததில், இக்கொள்ளைச் சம்பவத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்துத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்தனர்.
அங்கு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட மக்சூத் கானைக் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளான ரபிக் (40), முகைதீன் கான் ஆகிய இருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

