சென்னை: தமிழகத்தில் உள்ள பழமையான ஆவணங்களைப் பாதுகாக்க, ஜப்பானிய திசு முறை செப்பனிடும் பணி நடைபெற்று வருவதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 50வது தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அந்த ஆவணங்களைக் கொண்டுள்ள புதிய இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், பொது மக்களின் வசதிக்காக பழமையான ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட http://www.digitamilnaduarchives.tn.gov.in/ என்ற இணையத்தளம் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, 1857ஆம் ஆண்டுக்கு முன், ‘தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்’, ‘மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்’ என்ற இரு நுால்களும் அவரால் வெளியிடப்பட்டன.
பின்னர் பேசிய அமைச்சர் கோவி.செழியன், இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆராய, ஆவணங்களைத் தேடி வரும் அறிஞர்களுக்கு ஆதாரங்களை வழங்கும் ஆவணக் காப்பாளர்கள் பணி மிகவும் முக்கியமானது என்றார்.
“நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும், அனைத்து துறைகளின் ஆவணங்களையும் பாதுகாத்து, அதை ஆவணக் காப்பகத்துறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது. ஆவணங்களே அரசு நிர்வாகத்தின் முதுகெலும்புகள்,” என்றார் திரு கோவி.செழியன்.
தமிழக ஆவணக் காப்பகம் மிகவும் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிட்ட அவர், அங்கு 300 ஆண்டுகள் பழமையான, 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பழமையான ஆவணங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க ஜப்பானிய திசு முறையைப் பயன்படுத்தி செப்பனிடுதல் போன்ற நவீன முறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட சில வகை தாவரங்களில் இருந்து பெறப்படும் ‘செல்லுலோசில்’ மெல்லிய திசுப்படலம் தயாரிக்கப்படுகிறது. இது, ஒளி ஊடுருவும் தன்மையுடன், காகிதம் போன்ற கடினம் மற்றும் மடங்கும் தன்மை உடையதாக இருக்கும். இது, ‘ஜப்பானிய திசு’ என்று அழைக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பழமைவாய்ந்த காகிதங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை வெள்ளிப்புழு, கறையான், கரப்பான் பூச்சிகள் அரித்து சேதப்படுத்துவதைப் பார்த்திருப்போம்.
எனவே, இதுபோன்ற சேதங்களில் இருந்து பாதுகாக்க, ஆவணங்களின் உண்மைத்தன்மை கெடாமல் இருக்க அவற்றின்மீது ஒருவகை வேதிக்கலவையைப் பூசுவதுண்டு. இதனால் அந்த ஆவணங்கள் அரிக்கப்படாது.
இந்நிலையில், காகிதம் அல்லது ஓலைச்சுவடியைப் பாதுகாக்க ஜப்பானிய திசு காகிதத்தை அதன் மீது ஒட்டுகிறார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசு இந்த நவீன முறையைப் பின்பற்றியே பழங்கால ஆவணங்களைப் பாதுகாக்கிறது.

