சென்னை: தமிழகத்தில் 695 திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டி உள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்காக 44,383 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக தமிழக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த நிலம் தேவைப்படும்போது, வருவாய்த் துறையின் உதவி கோரப்படும்.
பின்னர் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிலம் எடுக்க, தனித்தனி பிரிவுகளை வருவாய்த் துறை ஏற்படுத்தும்.
இந்த வகையில், மத்திய, மாநில அரசுகளின் 695 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், வெளிப்படையான இழப்பீடு வழங்கல் மறுவாழ்வு சட்டத்தின்கீழ், வருவாய்த்துறை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு 1.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 79,202 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள 44,383 ஏக்கரை கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளதாகவும் வருவாய்த்துறை தெரிவிக்கிறது.
தேவையான சட்ட திருத்தங்கள் செய்தும், உத்தரவுகள் பிறப்பித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு, வழக்குகள் காரணமாக, இப்பணிகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், நடப்பு நிதியாண்டுக்குள் அனைத்து வழக்குகளையும் முடித்து நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனினும் தொழில்துறை, நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே, விமான நிலையத் திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் போன்றவற்றை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுத்துகிறது.
கடந்த ஆயிரம் நாள்களுக்கும் மேலாக, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க, நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

