சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள 28 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் ஸ்லிப்) விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தொடங்கியது.
சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் பணியைத் தொடங்கியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கப்படும் அந்தச் சீட்டில் அவரது பெயர், முகவரி, வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி, அடையாள விவரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதன்மூலம் வாக்காளர்கள் எளிதில் தங்களுக்கான வாக்குச்சாவடியைக் கண்டறிய முடியும்.
சென்னையில் மொத்தம் 4,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில், வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சீட்டு விநியோகத்தில் எந்தத் தவறும் ஏற்படாதவாறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஏறத்தாழ 4,500 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் முறையாக தாக்கல் செய்யப்பட்ட 5,139 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களை முன்னிட்டு திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, 4,500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 9) மாலை நேரத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
இம்முறை 28,030,658 ஆண், 29,304,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 57,343,291 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர் சீட்டு விநியோகம் உள்ளிட்ட பணிகளை ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.

