சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் தெருநாய்கள் தொல்லை பெரும்பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அவற்றுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், இதுவரை 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். அதனையடுத்து, சென்னை மாநகராட்சி தெருநாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் மாபெரும் திட்டத்தை இவ்வாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.
அத்திட்டத்தின்மூலம், 50 நாள்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150,000 லட்சம் நாய்களுக்குத் தடுப்பூசி போட 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், கால்நடை மருத்துவக் குழுவினர் நேரடியாகத் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
நாளொன்றுக்கு 3,000 நாய்களுக்குத் தடுப்பூசி போட இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதிவரை 46,122 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்றும் மணலி, ஆலந்தூர், மாதவரம் மண்டலங்களில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவுபெற்றது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் இதுவரை 134,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது; 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 12,255 தெருநாய்களின் உடலில் கணினி நுண்சில்லு (மைக்ரோசிப்) பொருத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெறிநாய்க்கடி பாதிப்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக்கூண்டுகளில் அடைத்துப் பராமரிக்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு ஏறக்குறைய 180,000 தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகப் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய ஐந்து இடங்களில் நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன.