சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முன்விரோதம் காரணமாக 475 கொலைகள் நடந்துள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், படுகொலைக்கான முக்கியக் காரணமாக குடும்பத் தகராறு உள்ளது.
அடுத்து வாய் தகராறு, முன்விரோதம் காரணமாக படுகொலைகள் நிகழ்கின்றன என காவல்துறையின் அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, குடும்ப, வாய் தகராறுகள் தொடர்பாக, முறையான புகார்கள் அளிக்கப்பட்ட கையோடு, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலும் தயக்கம் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்விரோதம் இருப்பது தெரியவரும் பட்சத்தில், பழிவாங்கத் துடிக்கும் தரப்பினரை ரகசியமாகக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தைவிட, தற்போது கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு, என்னென்ன காரணங்களால் அவை நிகழ்ந்துள்ளன என காவல்துறை அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறது.