சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இதுவரை 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகள், முழுமையாக அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தடையற்ற நிதியுதவி வழங்கும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
இத்திட்டங்களின் நடைமுறையாக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மின்னிலக்கச் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் செம்மைப்படுத்தி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு தகுதியான மாணவர்களைக் கண்டறிய முன்கணிப்பு பகுப்பாய்வு செய்தல், மாறுபாடுகள், தாமதங்களை நீக்கும் காகிதமற்ற இணைய வழி செயல்முறை, தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்குதல், தகுதியான எந்த மாணவரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய கள ஆய்வு மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையைக் கையாளுதல் உள்ளிட்ட புத்தாக்க அணுகுமுறைகளை தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் கையாண்டு வருகிறது.
“இதுவரை தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் வாயிலாக உயர்கல்வி பயிலும் 4.97 லட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், 4.16 மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும் பயனடைந்துள்ளனர்,” என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.