தடையை மீறி நடந்த திருவிழாவில் 500 காளைகள்; 1,000 காளையர்கள் - 20 பேர் காயம்

1 mins read
ccd50207-fa76-41c5-8d48-2d64d70a84ca
கொளத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்ட காளைவிடும் திருவிழா. - படம்: நியூஸ்18

ஆரணி: திருவண்ணாமலை அருகே தடையை மீறி நடந்த காளைவிடும் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் காளைவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்கழி அமாவாசை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் அந்தத் திருவிழாவை நடத்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், தடையை மீறி அங்கு காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஆயிரத்தும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உற்சாகமாகக் காளைகளை எதிர்கொண்டனர்.

அந்தப் போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று, திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த இளைஞரை முட்டித் தள்ளியது. கீழே விழுந்த அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவரைப்போலவே 20க்கும் மேற்பட்டோர் காளைகள் முட்டி காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், அவர்களில் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தடை விதிக்கப்பட்டும் அதனை மீறி காளைவிடும் திருவிழா நடத்தியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
காளைதிருவண்ணாமலைஜல்லிக்கட்டு